பெங்களூரு

ர்நாடக அமைச்சரவையில் பெங்களூரு முன்னேற்றத் துறை அமைச்சர் பதவிக்கு  பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

                                    அசோகா                                                                அஸ்வத் நாராயண்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையொட்டி பாஜக ஆட்சி அமைத்துள்ளது.    இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையால் அமைச்சர்கள் நியமனத்தில் கடும் குழப்பம் நிலவி வந்தது.   அமைச்சரவை இல்லாத முதல்வராக எடியூரப்பா கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆட்சி புரிந்து வந்தார்.   அதன்பிறகு அமைச்சரவை பதவி ஏற்றது.  இலாகாக்கள் பங்கீடு செய்வதிலும் கடும் குழப்பம் நிலவியது.

பெங்களூரு நகர முன்னேற்றத் துறை அமைச்சர் பதவி மிகவும் முக்கியமான பதவி என்பதால் பாஜகவினரிடையே இந்தப் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.    பல ஐடி நிறுவனங்கள் நிரம்பியுள்ள இந்த மாவட்ட பொறுப்பு வகிப்பது ஒரு கவுரவ பிரச்சினையாக பலருக்கும் உள்ளது.  தற்போது இந்தப் பொறுப்பை முதல்வர் எடியூரப்பா  தற்காலிகமாகக் கவனித்து வருகிறார்.

பாஜகவின் மூத்த தலைவரான ஆர் அசோகா பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என பாஜகவின் ஒரு பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.   ஆனால் நகரில் உள்ள ஒக்கலிகா சமுதாயத்தினரை இவரால் கவர முடியவில்லை என பாஜக தலைமை இவரை ஒதுக்கி வைத்திருந்தது.  ஒக்கலிகா சமுதாயத்தினர் நகரில் அதிக அளவில் வசித்து வருபவர்கள் ஆவார்கள்.

பாஜகவின் மல்லேஸ்வரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அஸ்வத் நாராயணன் துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டபோதிருந்தே அசோகா கடும் அதிருப்தியில் உள்ளார்.   அதைப் பலமுறை வெளிப்படையாக அசோகா தெரிவித்துள்ளார்.  முதல்வர் எடியூரப்பா பெங்களூரு நகர்ப்பகுதியைத் தனது வசம் வைத்துக் கொண்டு புறநகர் மற்றும் ராமநகரா மாவட்டப்  பகுதியை அசோகா மற்றும் நாராயணுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் நாரயணுக்கு கீழ் அசோகா பணி புரிய நேரிடும்.   மூத்த  தலைவரான அசோகா இதை விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.    மிக விரைவில் பெங்களூரு நகரின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.    பாஜக இவ்விரு தேர்தல்களிலும் வெற்றி பெற எண்ணம் கொண்டுள்ளது.  எனவே இந்த வேளையில் எவ்வித குழப்பமும் கட்சிக்குள் வரக்கூடாது என்பதிலும் கட்சித தலைமை கருத்தில் கொண்டுள்ளது.

இதனால் பாஜக தற்போதைய நிலையில் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.