பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நடத்திய தசரா விழாவில் பாஜக தலைவர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

சமூக விழாக்களில் கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துக் கொள்வது பொதுவான ஒன்றாகும்.   வட நாட்டில் பல பண்டிகைகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஒன்றாகக் கலந்துக் கொண்டுள்ளனர்.   நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் தசரா விழா கொண்டாடப்பட்டது.   வட இந்தியாவில் தசரா விழாவின் போது ராம் லீலா என்னும் பெயரில் ராவணன் உருவ பொம்மை எரிப்பது வழக்கமாகும்.

அவ்வகையில் பீகார் மாநிலத் தலைநகரான  பாட்னாவில் நேற்று ராம் லீலா விழா நடைபெற்றது.  இந்த விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்துக் கொண்டார்.  அவருடன் பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா மற்றும் சபாநாயகர் விஜய் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.    பாஜக சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

அனைத்து பாஜக தலைவர்களுக்கும் இந்த விழாவில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.   ஆயினும் ஒருவர் கூட இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட ஆளுநர் பாகு சவுகான், துணை முதல்வர் சுஷீல் மோடி, பாட்னா நகர மேயர் சீதா சாஹூ, மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நேற்று வெளியூர் செல்லாத போதிலும்  விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே நிதிஷ்குமாரின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ள நிவாரணப் பணிகளை பாஜகவினர் குறை கூறி வரும்போது இந்த விழா புறக்கணிப்பு அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.   பாஜக மற்றும் நிதிஷ்குமார் இடையிலான கூட்டணி விரிசல் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.