மும்பை:

மராட்டிய மாநிலம் பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் ராவ்சாகேப் தன்வே. இவரது மகன் சந்தோஷ் தன்வே. இவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவருக்கும் மும்பை பட உலகத்தில் இசை அமைப்பாளராக இருக்கும் ராஜேஷ் சர்கதே என்பவரின் மகள் ரேணுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஜபீந்தா எஸ்டேட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த திருமணம் மிகப் பெரிய ஆடம்பரமாக நடைபெற்றது. இதற்காக மெடிவால் ராஜவம்ச அரண்மனை போல் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  30 ஆயிரம்  பேர் அமரும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அனைத்து அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர்கள் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகர்களை மும்பையில் இருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வர 10 தனியார் ஜெட் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதுமட்டுமல்ல, திருமண காட்சிகள் முழுவதும் பறக்கும் ரிமோட் விமானங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன. 

ஒவ்வொரு திருமண அழைப்பிதழும் பல ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருந்தன.  திருமணத்துக்கு எவ்வளவு செலவானது என்பதை திருமண வீட்டார் தெரிவிக்கவில்லை. ஆனால், திருமண செலவு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் தங்கள்கருத்துகளை கூறியபோது, இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதற்கு இவரிடம் எப்படி பணம் வந்தது?  என்றும் ரூ.5 லட்சத்துக்கு மேல் திருமண செலவு செய்ய கூடாது என்று பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஆனால், பாரதிய ஜனதா தலைவர் இவ்வளவு பணத்தை செலவு செய்து ஏன் திருமணத்தை நடத்தினார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களிலும் இந்த திருமண போட்டோக்கள் வைரலாக பரவி வருகின்றன.