டில்லி:

பாஜக நாட்டை பின் நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘ நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்தேன். 13 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். பாஜக.வுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் எங்கள் சகோதர்களாகவே நினைக்கிறோம். எங்களை வெறுப்பவர்களிடமும் அன்பு செலுத்துவோம். நாங்கள் நீண்ட பாரம்பரியம் உடைய கட்சி. ஆனால் தற்போதும் இளமையானது. மாற்றங்களை நிகழ்த்த இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தால் தான் வெற்றி பெறுகிறார்கள். நன்மை செய்து வெற்றி அடையவில்லை. காங்கிரஸ் கட்சி மக்களின் குரலாக ஒலிக்கும். அன்பு பாசத்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நாட்டுக்கான அனைத்து முடிவையும் ஒருவரே எடுக்கிறார். மாற்று கருத்தை சொல்ல முடிவதில்லை’’ என்றார்.

மேலம், அவர் பேசுகையில், ‘‘ஒரு முறை நாட்டை தீயிட்டால் அணைப்பது கடினம். நாட்டை பிரிவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ.க இருந்தால் நாங்கள் மக்களை ஒன்று படுத்துவோம். கடந்த 2 வருடங்களாக காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை கண்டு காங்கிரஸ் அச்சப்படாது. பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது.

காங்கிரஸ் கட்சியே எனது குடும்பம். வருங்காலத்தில் இந்தியாவை வளப்படுத்துவோம். காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக, தனக்காக போராட முடியாத மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.