மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு அந்தேரியில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை செயல்பாட்டிற்காக அரசு ஒதுக்கீடு செய்த 14 ஏக்கர் நிலத்தில் வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு பரிசு பொருட்கள் விற்பனை கடை, ஸ்பா, பியூட்டடி சலூன், ஃபுட் கோர்ட், ரிலையன்ஸ் குழும அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த விதிமீறலை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.175 கோடி அபராதம் விதிக்க மாநில அரசின் வருவாய் துறை முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவின் மீது எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மாநில பாஜக அரசு மவுனம் காத்து வருகிறது. இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமா? அல்லது அம்பானிக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமா? என்று அமைச்சர் சந்திரகாந்த் படீல் ஆலோசனையில் இருக்கிறார்’’ என்றார்.

வருவாய் துறை கடந்த ஆண்டு அபராதம் விதித்து உத்தரவை பிறப்பித்தது. ஆனால் இதை கிடப்பில் போட்டதன் மூலம் பாஜக அரசின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை விட்டுபிடிக்குமாறு பாஜக மேலிடம் டில்லியில் இருந்து கூறியிருப்பதால் அமைச்சர் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது,‘‘அந்த குறிப்பிட்ட கோப்பு குறித்து எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை. அதை பார்த்த பின்னர் தான் விபரம் கூற முடியும்’’ என்றார். மருத்துவமனை நிர்வாகமும் இது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டது.

2008ம் ஆண்டில் 223 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 14 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு ரூ.1 என்ற வாடகை அடிப்படையில் 2009ம் ஆண்டு மருத்துவமனைக்கு 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.