ஜார்க்கண்ட் திருப்பம் – முதன்முறையாக தனிப்பெரும் கட்சி அந்தஸ்தை பறிகொடுத்த பாரதீய ஜனதா!

ராஞ்சி: பீகாரிலிருந்து கடந்த 2000ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் என்ற தனிமாநிலம் உருவானதிலிருந்து, இந்த 2019 சட்டமன்ற தேர்தலில்தான் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை முதன்முறையாக இழந்துள்ளது ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா.

ஒன்றுபட்ட பீகாராக இருந்தபோதே, பழங்குடியினப் பிரதேசமான ஜார்க்கண்ட்டில் பாரதீய ஜனதாவுக்கு எப்போதுமே தனி செல்வாக்கு உண்டு. அதேசமயம், லாலுவின் கட்சிக்கு அங்கு சற்று தலைவலிதான்.

எனவேதான், ஜார்க்கண்ட்டை தனிமாநிலமாகப் பிரிக்க அவர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரின் கட்சிதான் அப்போது ஒன்றுபட்ட பீகாரை ஆட்சி செய்தது.

மாநிலம் பிரிக்கப்பட்ட 200வது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 32 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியானது.

அடுத்ததாக, 2005ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் 30 தொகுதிகளைப் பெற்று தனிப்பெருங் கட்சி என்ற அந்தஸ்தை தக்க வைத்தது.

2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களில் மட்டுமே வென்றாலும், ஜேஎம்எம் கட்சியுடன் சேர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது. பின்னர் 2014ம் ஆண்டு தேர்தலில் 37 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாகி, கூட்டணிகளுடன் வலுவான நிலையில் ஆட்சியமைத்தது.

ஆனால், தற்போது நடந்துமுடிந்துள்ள தேர்தலில் 25 தொகுதிகளை வென்றாலும், தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்தை முதன்முறையாக இழந்துள்ளது. 30 இடங்களை வென்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்தை தட்டிச் சென்றுள்ளது.

மாநிலத்தில் அந்தக் கட்சியின் மோசமான ஆட்சிதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.