ராஞ்சி:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பாஜக முதல்வர் ரகுபர்தாஸ் சுயேச்சை வேட்பாளரிடம் பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி, ஜேஎம்எம், ஆர்.ஜே.டி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக தனித்து போட்டியிட்டது.

ஆட்சியைப் பிடிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவையான நிலையில், காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தோல்வியை எதிர்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மாநில பாஜக முதல்வர்,  ரகுபர் தாஸ் ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த தொகுதியில், சில பகுதிகளில் சுயேச்சை வேட்பாளரும், சில பகுதிகளில் முதல்வர் ரகுபர் தாசும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் திலேயே இருவருக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

அதேவேளையில், காங்கிரஸ், ஜெஎம்எம் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்ஹைத் ஆகிய இரு தொகுதிகளில் இருந்து போட்டியிட்டார்.

ஜெவிஎம் (பி) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மரண்டி, தான்வார் தொகுதியில் களம்கண்டார்.

இந்த நிலையில், பெர்மோ பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கோமியா பேரவைத் தொகுதியில் ஏஜெஎஸ்யூ கட்சியைச் சேர்ந்த லம்போதர் மஹ்தோ வெற்றிபெற்றுள்ளார்.

மதியம் 2 மணி அளவிலான வாக்கு  வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் :

பாஜக – 31

ஜெஎம்எம் – 24

காங்கிரஸ் – 12

ஆர்ஜேடி – 4

ஜெவிஎம் (பி) – 4

ஏஜெஎஸ்யு – 2

சிபிஐ (எம்எல்) – 1

என்சிபி – 1

சுயேட்சை – 2

இதன்மூலம் பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ்-ஜெஎம்எம்-ஆர்ஜேடி கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி சுயேச்சையை விட, முதல்வர் ரகுபர் தாஸ் 1,449 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

முன்னாள் முதல்வர் பாபுலால் மரண்டி 5,980 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

பர்ஹைத் தொகுதியில் 5,319 வாக்குள் முன்னிலைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன், தும்கா தொகுதியில் 5,381 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதன் காரணமாக மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.