டில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி

டில்லி

டில்லியில் நடந்த ஐந்து மாநகராட்சி வட்ட தேர்தலில் பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படு தோல்வி அடைந்துள்ளது.

டில்லியில் சென்ற ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது, டில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்து வருகிறது.  உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பார்க் ஆகிய ஐந்து மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது.  மொத்தம் 327 வாக்குச்சாவடிகளில் 50% அதிகமானோர் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.  இன்று வாக்குகள் எண்ணப்படன.  இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக் புரி, ரோகிணி ஆகிய நான்கு வார்டுகளில் ஆம் ஆத்மியும் சவுகன் பார்க்கில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் படு தோல்வி அடைந்துள்ளது.

இதில் ஷாலிமார் பாக் வடக்கு வட்டத்தில் பாஜக கவுன்சிலர் திலக் ராஜ் கட்டாரியா கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்ததால் தற்போது இந்த வட்டத்தை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது.  அடுத்த ஆண்டு டில்லி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.