Random image

கோவா அரசியல் நெருக்கடி : விரைவில் துணை முதல்வர் நியமனம்

டில்லி

கோவா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க விரைவில் துணை முதல்வர் நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

கோவாவின் முதல்வராக  பாஜகவை சேர்ந்த மனோகர் பாரிக்கர் பதவியில் உள்ளார்.  அவர் உடல்நிலை சீர் கெட்டதால் மும்பையில் சிகிச்சை மேற்கொண்டார்.   அதன் பிறகு உடல்நிலை தேறாததால் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.   அதன் பிறகு கோவா வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  அதனால் தற்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசின் தலைமை அமைச்சரான முதல்வர் உடல்நலக்குறைவால் அவரால் சரிவர அரசை கவனிக்க முடியவில்லை என பலரும்  கருத்து தெரிவித்தனர்.   காங்கிரஸ் கட்சி கோவாவில் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.   பாஜக வின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா இவ்விவகாரத்தில்  பாஜகவுக்கு எதிராக உள்ளது.   தற்போது கோவாவில் உள்ள அர்சியல் நெருக்கடிக்கு பாஜகவே காரணம் என கூறி வருகிறது.

இந்நிலையில் கோவாவின் அரசியல் நெருக்கடியை சமாளிக்கவும்,  ஆட்சியை கவனிக்கவும் துணை முதல்வராக ஒருவரை நியமிப்பது குறித்து மாநில பாஜக ஆலோசனை செய்து வருகிறது.    அதை ஒட்டி கோவா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர்.   அவர் இது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.