ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. நக்சல் பாதிப்பு என்பதை முன் வைத்து 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5 கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர், அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு டிசம்பர் 23ம் தேதி அறிவிக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் தீவிர தேர்தல் களப்பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டுள்ளது.

 

சிவோட்டர் நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 தொகுதிகளில் வெல்லும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு ஆகியவற்றுக்கு தலா 6 இடங்களும், மற்றவைகளுக்கு 6 இடங்களும் கிடைக்கும்.

அதாவது, எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. வாக்குவங்கி அடிப்படையில் கணக்கிட்டால் பாஜகவுக்கு 33.3 சதவீதமும், காங்கிரசுக்கு 31.2 சதவீதமும் கிடைக்கும்.

பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 7.7சதவீத வாக்குகள் பெறும். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு 4.6 சதவீத வாக்குகள் கிடைக்கும். இவ்விரு கட்சிகளும் இந்த தேர்தலில் கிங் மேக்கர்களாக திகழும்.

ஜார்கண்ட் முதல்வர் ரகுபார்தாஸ்

இந்த கருத்துக் கணிப்பில் ஒரு முக்கிய அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்ற பாஜக ஆட்சியின் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். வாக்கெடுப்பு நடத்தியவர்களில் 60 சதவீதத்தினர் முதலமைச்சர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ரகுபர் தாஸ் மீது 53.4 சதவீதம் மக்கள் மாற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். நவம்பர் மாத கருத்துக்கணிப்பில் இந்த சதவீதம் மேலும் அதிகரித்து, 60.9 சதவீதம் பேர் ரகுபர்தாஸ் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர்.

26 சதவீதம் பேர் நேரிடையாக ஆளும் அரசை குற்றம்சாட்டி இருக்கின்றனர். 11.2 சதவீதம் முதலமைச்சர் மீதும், 6.5 சதவீதத்தினர் மத்திய அரசையும், 4.5 சதவீதம் பேர் பிரதமரையும் சாடி இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் இவை அனைத்தும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளாக இருக்கிறது.

15.8 சதவீதத்தினர் தங்கள் தொகுதி எம்எல்ஏ சரியில்லை, வேலை வாய்ப்பின்மை, மாநில பொருளாதாரம் ஆகியவையே இந்த தேர்தலில் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று கூறி இருக்கின்றனர். 17.5 சதவீதம் பேர் தண்ணீர் பிரச்னையே முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று பதிலளித்து உள்ளனர்.

முதலமைச்சராக யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு, ரகுபர் தாஸ் என்று 28 சதவீதத்தினர் கூறி இருக்கின்றனர். செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த விகிதம் சற்றே அதிகமாகும். ஏறுமுகத்தில் இருந்து அவரது புகழ் கீழ்நோக்கி சென்றிருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் இறங்குமுகமாக இருந்த ஹேமந்த் சோரனுக்கு 22.7 சதவீதத்தினரும், பாபுலால் மராண்டிக்கு 21.9 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். செப்டம்பரில் 2 சதவீதமாக இருந்த அர்ஜூன் முண்டாவுக்கு இப்போது 8.2 சதவீதத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஒருவேளை, பாஜக பெரும்பான்மையை எட்டவில்லை என்றால், ரகுபர்தாசை ஓரம்கட்டிவிட்டு, யாரும் எதிர்பாராத வகையில் முண்டாவை முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிகிறது. காரணம், உட்கட்சி அரசியலில் அவருக்கு அதிக ஆதரவு இருப்பதேயாகும்.