ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையில் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் முதலமைச்சரான அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக இருந்து வந்த  சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் எழுந்தது. சச்சின் பைலட் தன்னிடம் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக கூறி வந்தார்.
ஆனால் கெலாட் தரப்போ, தங்களது அரசுக்கு 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறியது. கடந்த 2 நாட்களாக ராஜஸ்தான் காங். சட்டசபை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளாத நிலையில், துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய இரு பதவிகளில் இருந்தும் அவரை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது.
இந்நிலையில், ராஜஸ்தானின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எதிர்க்கட்சியான பாஜக நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.  ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்களான வசுந்தரா ராஜே உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.