கேரள வெள்ள நிவாரணம் : ரூ. 25 கோடி காசோலை அளித்ததாக பாஜக பொய்த் தகவல்

திருவனந்தபுரம்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி காசோலையை பாஜக அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் அளித்ததாக ஒரு பாஜக தொண்டர் தவறாக தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.   மாநிலம் முழுவதுமே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.    பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் நிவாரணமாக நிதியும் பொருட்களும் வழங்கினர்.    இந்நிலையில் கேரள வெள்ள நிதிக்கு பாஜக உதவவில்லை என பலரும் சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

பாஜகவை சேர்ந்த ஸ்ரீகுமார் ஸ்ரீதரன் நாயர் தனது முகநூலில், “பாஜக அமைச்சர்களும் பாராளுமன்ரா உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி காசோலை அளித்துள்ளனர்.   எதுவும் அளிக்கவில்லை என கூற வேண்டாம்” என மலையாளத்தில் பதிவிட்டிருந்தார்.   அத்துடன் அந்த பதிவில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கருணானந்தம், பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்டோர் ஒரு காசோலையை முதல்வர் பினராயி விஜயனிடம் அளிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

இதற்கு மற்ற முகநூல் உபயோகிப்போர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அதன்படி இந்த காசோலையை அமைச்சர் அளித்தது நிஜம் எனவும் ஆனால் இந்த பணம் மத்திய பெட்ரோலிய நிறுவனங்கள் ஒருங்கிணத்து அளித்தது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.  மேலும் அதற்கான செய்தித் தாள் ஆதாரங்களையும் அளித்துள்ளனர்.   அத்துடன் அதே புகைப்படத்தை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பொரேஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதையும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பொய்த் தகவலுக்காக பாஜகவை சேர்ந்த ஸ்ரீகுமார் ஸ்ரீதரன் நாயர் ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மற்றவர்களை நீக்கி பதிவிட்டிருந்ததால் சமூக வலை தள உபயோகிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Image courtesy : Altnews.in