டெல்லி:

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் மாவட்டத்தில் 5 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் தனி நபர் சட்ட மசோதாவை பா.ஜ எம்.பி. நிஷிகந்த் துபே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

‘‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள இந்த பகுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 25 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இந்த தொகுதிகள் தேர்தல் நடத்தப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் இந்த பகுதி கணக்கிலேயே கொண்டு வரப்படவில்லை’’ என்று நிஷிகந்த் துபே தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள இந்த பகுதியில் சட்டமன்ற தொகுதிகளும், லோக்சபா தொகுதியும் தேர்தல் நடத்தாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மார்ச் 9ம தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது அமர்வில் இந்த மசோதா விவாதத்துக்கு வரும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டத்தில் 5 லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா பதவியும் கூடுதலாக சேர்த்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று எம்.பி வலியுறுத்துகிறார்.

‘‘தேர்தல் நடக்கவில்லை என்றால் இந்த பகுதியில் உள்ள தொகுதிகள் காலியாக இருப்பதாக பதிவு செய்ய வேண்டும். எனினும் இந்த தொகுதி எண்ணிக்கையை நாடாளுமன்ற இரு அவைகளிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது’’ என்று துபே மசோத £வில் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மசோதாவை தாக்கல் செய்ய இவர் முயற்சி செய்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் முயற்சித்தார். ஆனால் லோக்சபா துணை சபாநாயகர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தாக்கல் செய்ய முடியாமல் போனது.

‘‘இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவிற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் இந்த பகுதிகளில் மேற்கொள்ளும் அராஜகத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும். 1950ம் ஆண்டில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்யும் நேரம் தற்போது வந்துள்ளது’’ என்றார்.