தாமரை சின்னத்தை பகிர்ந்த சமையல்காரர் டிஸ்மிஸ் : பா ஜ க அமைச்சர் அதிரடி

--

டில்லி

த்திய அமைச்சர் தாமரை சின்னத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக தனது சமையல்காரரை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் செயின்சிங் டியோரா.  இவர் ராஜஸ்தானை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திர சிங் என்பவரிடம் பணி புரிந்து வந்தார்.  ஒருமுறை கஜேந்திர சிங் அளித்த ஒரு விருந்தில் மத்திய இணை அமைச்சராக உள்ள பி பி சவுத்ரி கலந்துக் கொண்டுள்ளார்.  அப்போது செயின்சிங் சமைத்த உணவை உண்ட சவுத்ரி அவரை தன்னிடம் பணி புரியுமாறு அழைத்துள்ளார்.  அந்த சமயத்தில் ரூ.8000 சம்பளம் வாங்கிய அவருக்கு ரூ.15000 தருவதாக கூறி உள்ளார்.

ஏழ்மை நிலையில் இருந்த செயின்சிங் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.  பி பி சவுத்ரியும் இவரை டில்லிக்கு அழைத்துச் சென்று தனது இல்லத்தில் பணிபுரிய வைத்துள்ளார்.  செயின்சிங் பா ஜ க மீது மிகவும் பற்று கொண்ட ஒரு தொண்டர்.  ராஜஸ்தானில் அனந்த்பால் சிங் என்பவர் போலீசாரால் கொல்லப்பட்டதால் மாநிலம் எங்கும் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.  அந்த சமயத்தில் முகநூலில் தாமரை (பா ஜ க சின்னம்) போட்ட ஒரு பதிவு பரவி வந்துள்ளது. அதில் ”நாம் செய்த தவறு தாமரையை தேர்ந்தெடுத்தது” என இந்தியில் எழுதப்பட்டிருந்தது.

அதை பலரும் பகிரவே, செயின்சிங் தனது முகநூல் பக்கத்தில் அவரும் பகிர்ந்துள்ளார்.  அது அமைச்சரின் கவனத்துக்கு செல்லவே அவரும் இது குறித்து கண்டித்துள்ளார்.  உடனே செயின்சிங் தனது பதிவை நீக்கி விட்டார்.  ஆயினும் திருப்தி அடையாத அமைச்சர் அவர் பணியிலிருந்து நீக்கி விட்டார்.  இது குறித்து தனது முன்னாள் முதலாளியான கஜேந்திரசிங் இடம் முறையிட்டுள்ளார்.  ஆனால் கஜேந்திரசிங் சொல்லியும் அமைச்சர் இவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

பணி இழந்து ராஜஸ்தானில் உள்ள செயின்சிங் “நான் செய்த ஒரே தவறு பா ஜ க ஆதரவாளனாக இருந்தது தான்.” என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.