மத்திய பிரதேசம்: மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்த பாஜக அமைச்சர்

போபால்:

மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சர் மழை வேண்டி 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில் மகளிர் மற்றம் குழுந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் லலிதா யாதவ். சத்தர்ப்பூர் தொகுதியை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.

இந்நிலையில் சத்தர்ப்பூர் கோவிலில் மழை வேண்டி 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கை நடத்தினார். திருமணத்தை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா பிரிஜ்நந்தன் கூறுகையில், ‘‘தவளை திருமணம் மற்றும் விருந்து என்பது பழங்காலத்து சம்பிரதாயமாகும். இந்த திருமணத்தை நடத்தி வைத்தால் கடவுள் மனம் இறங்கி மழைப் பொழிவை உண்டாக்குவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. மூட நம்பிக்கையை அமைச்சர் ஊக்குவித்துள்ளார் என்று குற்றம்சாட்டினர். அமைச்சர் கூறுகையில்,‘‘சுற்றுசூழலை சமநிலைப்படுத்த இது போன்ற பாரம்பரிய சம்பிரதாயங்கள் அவசியம்’’ என்றார்.

சமீபத்தில் உத்தரபிரதேசம் வாரனாசியில் மழை வேண்டி 2 பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக 2 பேர் மணமக்கள் கோலத்தில் தவளை பொம்மைகளை கையில் வைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.