ம்மு

ரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவரை அவருடைய முகநூல் பதிவு அரசுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பணியில் இருந்து நிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநில அரசு கடந்த வருடம் அரசுப் பணியாளர் நன்னடட்தை விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது.   அதன் படி அரசுக்கு எதிராக சமூக தளங்களில் பதிபவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப் படுவார்கள் என்னும் விதி அமுலுக்கு வந்துள்ளது.   இந்த விதி அமுலுக்கு வந்து ஓராண்டான நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்க மருந்துப் பிரிவின் பதிவாளர் டாக்டர் அமித் குமார் முதல் பலியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பாலி பகத் பாஜகவை சேர்ந்தவர்.   இவர் தனது முகநூல் பக்கத்தில் படங்களுடன் ஒரு பதிவை பதிந்திருந்தார்.    அதில், “ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான் புதிய லிஃப்ட் ஒன்றை மக்களுக்கு அளித்துள்ளேன்.   டெட்டனஸ் (காயத் தொற்று) நோய்க்கான விசேஷ புதிய பிரிவு ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளேன்.   இந்த இரண்டுக்கும் அரசு ரூ.71 லட்சம் செலவு செய்துள்ளது”  எனக் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் அமித்குமார், முகநூலில் அந்த லிஃப்ட் புதிது அல்ல எனவும், ஏற்கனவே பழுது அடைந்ததை புதிப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.   அத்துடன்  ஏற்கனவே இருந்த படுக்கைகளை புதிய இடத்தில் அமைத்து விசேஷ டெட்டனஸ் வார்ட் என அறிவிப்பதால் ஒரு பயனும் இல்லை என அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு அமைச்சரின் செயலாளர் தன்னை பல முறையில் மிரட்டியதாக தற்போது அமித் குமார் தெரிவித்துள்ளார்.    இறுதியாக அமித்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணி நீக்கத்துக்கு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.   அவர், ”அமைச்சர்கள் பலாத்கார மற்றும் கொலைக் குற்றவாளிகளை ஆதரிக்கலாம் ஆனால் மருத்துவர் உண்மையை பேசக் கூடாது.    மெகபூபா முஃப்தியின் சர்வாதிகார ஆட்சியில் முகநூலில் உண்மையைச் சொன்ன மருத்துவருக்கு தண்டன”  என பதிந்துள்ளார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சுனந்தா ரைனா, “அமித் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டது உண்மைதான்.    சட்டத்துக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அமித்குமார் அவர் தரப்பை விளக்கலாம்”  என தெரிவித்துள்ளார்.

வரும் திங்கள் கிழமைக்குள் அமித் குமாரை மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக காஷ்மீர் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.