Random image

மேற்கு வங்கம் : காலை உடைப்பதாக மிரட்டிய மத்திய பாஜக அமைச்சர்.

சன்சால், மேற்கு வங்கம்

மது விழாவில் கலந்துக் கொண்டவரை காலை உடைப்பேன் என மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மிரட்டி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபுல் சுப்ரியோ பாஜகவை சேர்ந்தவர்.   இவர் மத்திய பாஜக அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.   இவர் நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சால் பகுதியில் ஒரு அரசு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.    அந்த விழா மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட விழாவாகும்.   அதில் நடக்க இயலாதவர்களுக்கு சக்கர நாற்காலிகளை அமைச்சர் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த ஒருவர் அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்துள்ளார்.  இதனால் அமைச்சர் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளார்.   குறுக்கும் நெடுக்கும் நடந்தவரை நோக்கி அமைச்சர், “உங்களுக்கு என்ன ஆகியது?  உங்கள் பிரச்னைதான் என்ன?   ஒரு இடத்தில் நிலையாக நில்லுங்கள்.  இல்லை எனில் நான் உங்கள் காலில் ஒன்றை உடைத்து ஊன்று கோலை பரிசளிப்பேன்.   அத்துடன் இங்கு கூடி உள்ளவரகளைக் கொண்டு உங்களை அடித்து உதைக்க வைப்பேன்.” என கூறி உள்ளார்.

இந்த செய்தி மேற்கு வங்க மாநிலத்தின் பல செய்தி ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது.   இந்த செய்தியை வெளியிட்ட டைம்ஸ் நவ் ஊடகம் அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளது.   மாற்றுத் திறனாளிகள் நிகழ்வில் ஒருவரை காலை உடைப்பேன் என்பதும் அவருக்கு ஊன்று கோல் பரிசளிப்பேன் என்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் அவ்வாறு சொல்வது மாற்றுத் திறனாளிகளை கேவலப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைச்சர் தனது டிவிட்டரில், “டைம்ஸ் நவ் ஊடகத்தில் உள்ள எனது அன்பு நண்பர்களே.   இது முழுவதும் நகைச்சுவையாக பேசப்பட்டது.  உங்களுக்கு பரபரப்பு செய்திக்காக இதை பதிவதை விட வேறு செய்திகளை கவனியுங்கள்” என பதிந்துள்ளார்.