மீரட்

மீரட் தொகுதி சட்டமன்ற பா ஜ க உறுப்பினர் சங்கீத் சோம் தாஜ்மகால் இந்திய சமுதாயத்துக்கு ஒரு கறை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்ட சுற்றுலாத்துறை கையேட்டில் தாஜ்மகாலின் பெயரை நீக்கி இருந்தது.   ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக உள்ள கோரக்பூர் கோயிலை சேர்த்து இருந்தது.   பின்பு இது பற்றி எழுந்த பரபரப்பினால் அரசு தாஜ்மகால் எந்த ஒரு மதத்தின் சின்னம் இல்லை எனவும் முன்னேற்றம் அடைந்து விட்ட சுற்றுலாத்தலம் என்பதால் அதை கையேட்டில் இருந்து நீக்கியதாகவும் கூறியது.

இந்நிலையில் இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மீரட் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் பா ஜ க வின் பிரமுகருமான சங்கீத் சோம் ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அதில், “தற்போது பலரும் தாஜ்மகாலை சரித்திரபூர்வமான இடங்கள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு கூச்சல் இடுகிறார்கள்.  நான் கேட்கிறேன்.   சரித்திரம் என்றால் என்ன?   கறை படிந்த பக்கங்களை வெளியே காட்டுவது சரித்திரம் இல்லை.   தாஜ்மகால் நமது கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை.   அதைக் கட்டிய ஷாஜஹான் ஆட்சிக்காக தனது தந்தையை சிறையில் அடைத்த ஒரு கொடுங்கோலன். அவர் இந்திய நாட்டுக்கு  ஒரு துரோகி.    அவர்  இந்திய சரித்திரத்துக்கு ஒரு கறை.  இந்திய மக்களை மதம் மாறச் சொல்லி கட்டாயப் படுத்திய ஷாஜஹான் அப்படி மாறாதவர்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த ஒரு கொலைகாரர்” என குறிப்பிட்டார்.

அவர் கூறியதில் மிகவும் பிழை உள்ளதாக சரித்திர ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். “ஷாஜஹான் தனது தந்தையின் மரணத்துக்குப் பின் அரசுரிமை பெற்றார்.   ஷாஜஹானைத் தான் அவர் மகன் அவுரங்கசீப் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினார்.   அதே போல மதம் மாறாத மக்களைக் கொன்றவரும் ஷாஜஹான் இல்லை. அவுரங்கசீப் தான்.   அவ்வளவு ஏன் இப்போது தாஜ்மகால் சரித்திரப் புகழ்பெற்ற இடத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.  சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளது” என  கூறுகின்றனர்.