க்னோ

த்திரப் பிரதேச மாநில சட்டமன்ற பாஜக உறுப்பினர் ஒருவர் நேபாளத்தில் சூதாடும் விடுதியில் மது அருந்தியபடி சூதாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று மகராஜ்நகர்.  இந்த நகரின் முன்னாள் நகராட்சி தலைவர் ஜெய் மங்கள் கனௌஜி.    இவர் அந்த பகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பங்கஜ் சௌத்ரிக்கு மிகவும் வேண்டியவர்.   அவருடைய சிபாரிசில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து கனௌஜி வெற்றி பெற்றார்.

இவர் நேபாளத்தில் உள்ள ரூப்தேகி காசினோவில் சூதாடுவதைப் போல வீடியோ ஒன்று வெளியாகியது.   அவர் சூதாடும் போது அருகில் மது பாட்டில்கள் இருப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.   ரூப்தேகி காசினோ என்பது நேபாளத்தின் மணிக்ராம் பகுதியில் உள்ள டைகர் ரிசார்ட் என்னும் ஓட்டலில் உள்ளது.   இந்தப் பகுதியில் உள்ள சூதாட்ட விடுதிகளில் சூதாட்டத்துடன் விபச்சாரமும் நடப்பதாக பல முறை நேபாள காவல்துறை கைது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இது போல ஒரு இடத்தில் பாஜக உறுப்பினர் ஜெய் மங்கள் கனௌஜி இருப்பது போல் வீடியோ வெளியானது  பாஜக வை கடும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.   இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என சரியாக தெரியாத போதிலும் மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்டது கண்டறியப் பட்டுள்ளது.   கட்சியின் மாநிலத் தலைமை இது குறித்து கனௌஜியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் கனௌஜி, “அந்த வீடியோவில் உள்ளது நான் இல்லை.   இது போல ஒரு வீடியோ இருப்பது எனக்கு தெரியாது.   அத்துடன் இதை யார் எடுத்தது எனவும் அந்த வீடியோ எப்படி வைரல் ஆனது என்பதும் எனக்கு தெரியாது.   மேலும் அந்த வீடியோவில் உள்ளவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது”  என கூறி உள்ளார்.