குரோர்பதி நிகழ்ச்சி விவகாரம்: அமிதாப்பச்சன் மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ. போலீசில் புகார்..

 

மும்பை :

டிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘ கான் பனேகா குரோர்பதி’’ ( கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு ஒளிபரப்பில், கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது..

“1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரும்,அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் நகலை எரித்தனர்?” என்பது அந்த கேள்வியாகும்.

விடைகளாக, விஷ்ணு புராணம், பகவத்கீதை, ரிக்வேதம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
(இதற்கான விடை- மனுஸ்மிருதி)

இந்த கேள்வி சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அமிதாப்பச்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், “இந்த கேள்வி இந்துக்களின் மனதை புண் படுத்துவதாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அபிமன்யூ பவார் என்பவர், சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்டதாக கூறி, அமிதாப்பச்சன் மீதும், குரோர்பதி நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டி.வி. மீதும் புகார் அளித்துள்ளார்.

அபிமன்யூ பவார், மகாராஷ்டிர முன்னாள் முதல்- அமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் நேர்முக உதவியாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிமன்யூ புகார் மீது போலீசார் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யவில்லை.

– பா. பாரதி