வாரனாசி:

பிரதமர் மோடி தொகுதியான வாரனாசியில் உள்ள பிந்த்ரா தொகுதி எம்எல்ஏ.வாக பாஜ.வை சேர்ந்த அவதேஸ் சிங் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு சொந்தமான சிறிய நிலத்தில் மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று திடீரென அப்பகுதியில் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் அவதேஸ் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வந்து கட்டுமான பணியை நிறுத்தும்படி கூறினர். இதற்கு எம்எல்ஏ தரப்பினர் மறுப்பு தெரிவித்ததால் விஷயம் சிக்ரா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது கட்டுமான பணியை நிறுத்தும்படி முஸ்லிம்கள் கோஷமிட்டனர். இதனால் அவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் இவர்களும் தாக்கினர். இதில் 10 பேர் காயமடைந்தனர்.

கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் சிவ பக்தர்கள் அதிகம் கூடும் சாவான் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சிவ பக்தர்கள் அதிகளவில் அப்பகுதியில் இருப்பதால் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நில அபகரிப்பு புகாரில் இருந்து எம்எல்ஏ பெயர் நீக்கப்படுவதாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.