லக்னோ:

சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்தா ராயின் மனைவியான பாஜக கட்சி எம்எல்ஏ அல்கா ராய், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான முக்தர் அன்சாரிக்கு உதவ வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு கிருஷ்ணானந்தா ராயை முக்தர் அன்சாரி சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் போதிய ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. முக்தர் அன்சாரி தற்போது பஞ்சாபிலுள்ள மொகாலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி வத்ராவிற்கு தான் எழுதியிருந்த கடிதத்தில் பாஜக எம்எல்ஏ அல்கா ராய் தெரிவித்துள்ளதாவது: கடந்த 14 ஆண்டு காலமாக நான் நீதிக்காக போராடி வருகிறேன், பஞ்சாபிலுள்ள உங்கள் அரசாங்கமும் உங்கள் கட்சியும் முக்தர் அன்சாரியை காப்பாற்றி வருகின்றன. அவரை உத்திரப் பிரதேசத்திற்கும் மாற்ற மறுத்துவிட்டன. தங்களுக்கும், ராகுல் காந்திக்கும் இது தெரியாது என்பது நம்ப முடியாததாகவே உள்ளது. என் கணவர் மட்டுமல்லாமல்ல, முக்தர் அன்சாரி பலரது குடும்பங்களை அழித்துள்ளார்.

முத்தர் அன்சாரி தன்னுடைய குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று என்னைப் போல பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கடிதத்தை பார்த்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வகையில் தனக்கு உதவும்படி அல்கா ராய் பிரியங்கா காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.