Random image

நடிகர் சுஷாந்த் விவகாரம்; சிவசேனா எம்.பிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. நோட்டீஸ்

நடிகர் சுஷாந்த் விவகாரம்; சிவசேனா எம்.பிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. நோட்டீஸ்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜுன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ, விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராத்’’ சுஷாந்த் தந்தை ஆர்.ஆர்.சிங்குக்கு இரண்டு மனைவிகள். இது தொடர்பான கருத்து வேறுபாட்டால், தனது தந்தையுடன் சுஷாந்த் மனக்கசப்பு கொண்டிருந்தார்’’ எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.

சுஷாந்த் சிங் மைத்துனரான பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் குமார் பப்லு, சிவசேனா எம்.பி.சஞ்சயின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவருக்கு  வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

‘’சுஷாந்த் தந்தை குறித்து நீங்கள் தெரிவித்த கருத்து உண்மையானது அல்ல . தவறான கருத்தைக் கூறிய நீங்கள் ( சஞ்சய் ராத்) 48 மணி நேரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என அந்த நோட்டீசில் எம்.எல்.ஏ. பப்லு குறிப்பிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ. சார்பில் அவரது வழக்கறிஞர் பீரேந்திர குமார், ஈ-மெயில் மூலமாக சஞ்சய் ராத்துக்கு  இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.

‘’ஒரு முதிர்ச்சியான தலைவர் யாரோ சொன்னார்கள் என்பதால் இப்படி ஒரு பொய்யான தகவலைக்  கூறி இருக்கக்கூடாது’’ என வழக்கறிஞர் பீரேந்திர குமார் கூறினார்.

-பா.பாரதி.