காங்.தலைவருக்கு கொலை மிரட்டல்: மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த பாஜ எம்எல்ஏ
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் எம்எல்ஏவின் மகனை, அந்த எம்எல்ஏவே காவல்துறையில் ஒப்படைத்தார்.இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஜோதிராதித்ய சிந்தியா 5ம் தேதி (இன்று) தாமோ மாவட்டத்தின் ஹத்தா நகரில் நடக்கவிருக்கும் பேரணியில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஹத்தா தொகுதி பாஜக பெண் எம்.எல்.ஏவான உமாதேவி காதிக் என்பவலின் மகனான 19 வயது மகனான பிரின்ஸ்தீப் காதிக், ஜோதிராதித்ய சிந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளமான பேஃஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் “பந்தல்கந்த் ராணியின் மகளான ஜான்ஸியை கொலை செய்த ஜிவாஜிராவின் ரத்தம் உங்கள் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, எனவே ஹத்தாவில் நுழைந்து அந்த நிலத்தை தீட்டுப்படுத்தினால் உங்களை சுட்டு வீழ்த்துவேன்” என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரின்ஸ்தீப் காதிக்கின் இந்த பதிவு குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவரான அனுராக் வர்தன் ஹசாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த பிரின்ஸ்தீப் காதிக்கின் தாயாரான ஹத்தா தொகுதியின் எம்.எல்.ஏ உமாரானி அதிர்ச்சி அடைந்தார். தனது மகனனின் அடாவடித்தனத்தால் மனம் உடைந்த அவர், தனது மகனை தானே அழைத்து வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜ எம்எல்ஏ உமாராணி, இது சரியான நடத்தை அல்ல, அவன் ஜெயிலுக்கு போக வேண்டியவன், அதன் காரணமாகவே நான் அவனை காவல்துறையில் ஒப்படைத்தேன் என்று கூறினார்.
இந்த விவகாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பெண் எம்எல் ஏவின் செயல் பொதுமக்கள் மட்டுமல்லாத அனைத்து கட்சிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.