பெண் நீதிபதியை மிரட்டிய பாஜக எம் எல் ஏ : பரபரப்பு வீடியோ

க்ரா

க்ரா அருகில் உள்ள ஃபதேபுர் சிக்ரி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் உதய்பான் சவுத்ரி ஒரு பெண் நீதிபதியான கரிமா சிங் என்பவரை மிரட்டியது வீடியோ பதிவாகி உள்ளது.

 

பாஜக ஆளும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.   இந்த வருடம் மே மாதம் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுபினர் ஹர்ஷ்வர்ஹ்டன் பாஜ்பாய் தன்னை அடையாளம் கண்டுக் கொள்ளாத அலகாபாத் நகர் போலிஸ் சூப்பிரண்ட் அதிகாரியை மிரட்டி உள்ளார்.  தற்போது அதே போல மற்றொரு மிரட்டல் நிகழ்வு நடந்துள்ளது.

ஃபதேபூர் சிக்ரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய்பான் சவுத்ரி பாஜகவை சேர்ந்தவர்.   இவர் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அரசு அதிகாரியும் துணை பிரிவு நீதிபதியுமான கரிமா சிங் என்னும் பெண் அதிகாரியை சந்தித்துள்ளார்.    அப்போது இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.   இதில் ஆத்திரம் அடைந்த உதய்பான் சவுத்ரி அந்த பெண் அதிகாரியை மிரட்டி உள்ளார்.

சவுத்ரி, “நீங்கள் இவ்வாறு என்னுடன் பேசக்கூடாது.   நீங்கள் நீதிபதி பொறுப்பில் உள்ளதை என்னிடம் காட்ட நினைக்கிறீர்களா?  நான் எம் எல் ஏ என்பது உங்களுக்க் தெரியாதா? எனது சக்தியை நீங்கள் அறியவில்லை.   ஜனநாயகத்தின் சக்தியை நீங்கள் அறியவில்லை” என கரிமா சிங் கிடம் சத்தம் போட்டுள்ளார்.

அத்துடன் அவருடன் வந்தவர்களும் அந்த பெண் அதிகாரியை பார்த்து கூச்சலிட்டுள்ளனர்.   ஆனால் அந்த பெண் அதிகாரி சவுத்ரியிடம் அமைதியாக பதில் சொல்லி உள்ளார்.   இந்த நிகழ்வு வீடியோ பதிவாக்கப்பட்டு வைரலாகி உள்ளது.   செய்தியாளர்களை சந்தித்த கரிமா சிங் தன்னிடம் பலர் தகாத வார்த்தைகளைக் கூறி கூச்சலிட்டதாக தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறு நிகழ்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.