குஜராத்தை போல் மேற்குவங்க இந்துக்கள் முஸ்லிம் இன படுகொலையில் ஈடுபட வேண்டும்: பாஜ எம்எல்ஏ அதிர்ச்சி பேச்சு

 

ஐதராபாத்:

2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலை சம்பவத்தைப்போல மேற்கு வங்கத்தில் வாழும் இந்துக்கள் கலவரம் செய்ய வேண்டும் பேசி பாஜ எம்எல்ஏ. ஒருவர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளார்.

 

தெலங்கானா மாநிலம் கோஷல்மால் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா சிங்.

இவர், ‘‘மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. அங்கு மத மோதலில் ஈடுபடுவோருக்கு குஜராத்தில் நடத்தியது போல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மேற்கு வங்கம் விரைவில் பங்களாதேஷாக மாறிவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். உ.பி.யில் முஸ்லிம் ஆதரவு ஆட்சி (முல்லா சர்க்கார்) வெளியேற்றப்பட்டுவிட்டது. அங்கு எங்கள் ஆட்சி வந்துவிட்டது’’ என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அப்போது அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகள் நாயகம் குறித்து 17வயது சிறுவன் ஒருவன் தவறான புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதை தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் பஷிரத் பகுதியில் மத கலவரம் வெடித்துள்ளது. போலி புகைப்படங்களை பகிர்ந்ததற்காக பாஜ தலைவர்கள் பலர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் இந்து வாக்குகளை பெறுவதற்காக மத கலவரத்தை தூண்டி பாஜ ஆதாயம் தேட நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.