ஆக்ரா நகரை அகர்வால் என பெயர் மாற்ற கோரும் பாஜக எம் எல் ஏ

க்ரா

க்ரா நகரின் பெயரை மாற்ற வேண்டும் என உத்திரப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் ஜகன் பிரசாத் கர்க் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீப காலமாக ஊர்களின் பெயர்கள் மாற்றுவது பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. அலகாபாத் நகரின் பெயர் பிரயாக் ராஜ் என உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகியால் மாற்றப்பட்டது. அதன் பிறகு அவர் ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தி மாவட்டம் என மாற்றப்பட உள்ளதாக அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் பெயர் கர்ணாவதி என மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட ஊர்களின் பெயரை மாற்ற பாஜக அரசு தீவிரமாக உள்ளது இந்நிலையில் உத்திரப் பிரதேச மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் வடக்கு ஆக்ரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜகன் பிரசாத் கர்க் என்பவர். இவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஆக்ரா நகரில் அகர்வால் வகுப்பினர் பெருமளவில் வசித்து வருகின்றனர். அதனால் இந்த ஆக்ரா நகரின் பெயர் அகர்வால் அல்லது ஆக்ராவால் என மாற்றப்பட வேண்டும்.

ஆக்ரா என்பதற்கு எந்த ஒரு அர்த்தமும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் சோதித்து பாருங்கள். இந்நகருக்கு ஆக்ரா என பெயர் சூட்டியதற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்நகரின் பெயரை மாற்ற வேண்டும் என நான் முதல்வருக்கு கோரிக்கை விடுக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.