பிரியங்காவின் அரசாங்க வீட்டில் குடிபுகும் எம்.பி.க்கு புற்றுநோய்..

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி.பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், டெல்லியில் அவர் குடியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்ய மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

அந்த வீடு பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி.யான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வீட்டை காலி செய்யும் ஏற்பாடுகளில் பிரியங்கா ஈடுபட்டுள்ளார்.

அந்த வீட்டிலேயே, அனில் பலூனுக்கும், அவரது மனைவிக்கும்  தேநீர் விருந்தளிக்க முடிவு செய்த பிரியங்கா, இது குறித்து அவருக்கு கடிதமும் எழுதினார்.

ஆனால் புற்றுநோய் காரணமாக  வீட்டிலேயே தங்கி இருக்கும் எம்.பி.அனில், தன்னால் விருந்துக்கு வர இயலாது என ஆதங்கப்பட்டு , பிரியங்காவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

’’நான் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று டெல்லி வந்திருப்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.. நான் வீட்டில் கொஞ்சகாலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால், விருந்துக்கு வர இயலாது. அந்த வீட்டில் உங்களுக்கு நான் விரைவில் விருந்தளிப்பேன்’ என்று அனில் அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் கிடைத்ததும், தொலைபேசியில் அனிலை தொடர்பு கொண்டு பேசிய பிரியங்கா, அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

-பா.பாரதி.