நிதி ஒதுக்கீடு மோசடியில் சிக்கிய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர்

--

சூரத்: பாரதீய ஜனதாவின் தற்போதைய சூரத் தொகுதி மக்களவை உறுப்பினர் தர்ஷனா ஜர்தோஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; நகராத விசுப்பலகைகளை(Bench) அமைப்பதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.60 கோடி ஒதுக்கியிருக்கிறார் தர்ஷனா. இந்த உட்காருமிடங்களின் மொத்த எண்ணிக்கை 4,400.

இதை எதிர்த்து, சமூக ஆர்வலர் சஞ்சய் எலவா என்பவர் சார்பாக புகாரளிக்கப்பட்டது. ஏனெனில், விதிமுறைகளின்படி, அசையாத சொத்துக்களுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த முடியாது. ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் தற்போது விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தப் புகாரை ஏற்ற சூரத் மாவட்ட ஆட்சியர், அதை, தொடர்புடைய துறைக்கு அனுப்பி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுகளில், குடியிருப்போர் சமூகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில், 4,400க்கும் மேற்பட்ட நகராத விசுப்பலகைகளை அமைக்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.60 கோடி ஒதுக்கினார் தர்ஷனா.

இதற்காக, இரண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் தரப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி