டில்லி

பா ஜ க உறுப்பினர் அனுராக் தாக்கூர் பாராளுமன்றத்தில் மொபைலில் படம் எடுத்ததற்கு சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தார்.

ஜூலை மாதம் 24ஆம் தேதி அன்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆறு காங்கிரஸ் உறுப்பினர்களை அவையில் காகிதங்களை வீசி அமளி செய்ததற்கு சஸ்பெண்ட் செய்தார்,   அதற்காக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதை பா ஜ க உறுப்பினர் அனுராக் தாக்கூர் தனது மொபைலில் வீடியோ, மற்றும் புகைப்படங்கள் எடுத்தார்.

அதை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகருக்கு புகார் அளித்தனர்.  ஆம் ஆத்மி உறுப்பினர் பகவாந்த் மான் இதுபற்றி சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  சபாநாயகர் இது பற்றி தனக்கு எதுவும் தெரிய வரவில்லை எனவும், அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத் தக்கது எனவும் கூறினார்.  மேலும், அப்படி நடந்திருப்பின் அந்த உறுப்பினர் உடனடியாக அவையில் மன்னிப்புக் கோர வேண்டும் என எச்சரித்தார்.

அவையில் கடும் கூச்சலுக்கிடையே தாகூர் மன்னிப்பு கோரினார். “நான் மொபைல் உபயோகித்தது யாருக்கேனும் பிடிக்கவில்லை எனில் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்தார்.

சபாநாயகர், ”இன்னொரு முறை இது போல தவறு நடக்ககூடாது என எச்சரிக்கிறேன்” என கூறினார்.