நாட்டு முன்னேற்றத்தை மறந்ததால் தோற்றோம் : பாஜக எம் பி

டில்லி

நாட்டு முன்னேற்றத்தை மறந்ததால் பாஜக தோல்வி அடைந்ததாக அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ககாடே தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான சட்டப்பேரவை தேர்தலில் பல இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ககாடே, “இந்த தோல்விக்கு முழுக்காரணம் பாஜகவின் அணுகுமுறை எனவே நான் கருதுகிறேன். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தோல்வி அடையலாம் என நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன்.

ஆனால் மத்தியப் பிரதேசத்தில் கட்சி இவ்வளவு பின்னடைவை சந்திக்கும் என எண்ணவில்லை. இதற்கு முக்கிய காரணம் கட்சியின் பிரசாரம் ராமர் கோவில், சிலைகள் அமைத்தல், ஊர்களின் பெயர்களை மாற்றுதல் ஆகியவைகளை குறித்தே அமைந்தது என நான் கூறுவேன்.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் மோடியின் பிரசாரம் நாட்டின் முன்னேற்றத்தை குறித்து இருந்ததால் பாஜக பெரும் வெற்றி அடைந்தது. ஆனால் இந்த சட்டப்பேரவை பிரசாரத்தில் நாட்டு முன்னேற்றத்தை முழுவதுமாக பாஜக மறந்து விட்டது. அதனால் தான் பாஜக இந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.