அமைச்சரும், எம்பியும் வாக்குவாதம் செய்த போது

ந்தூர்

த்திய பிரதேச மாநில எம் பி போத் சிங் பகத்,  தங்களின் பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசின் மீது போலி விதைகள் அளித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், பாலாகாட் தொகுதியின் பாஜக எம் பி போத் சிங் பகத்.  அதே தொகுதியில் இருந்து விவசாய அமைச்சரானவர் கௌரிசங்கர் பிசேன்.   பாலாகாட் தொகுதியில் உள்ள பகத்தின் பண்ணை விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட யசோதா ஹைபிரிட் சீட்ஸ் பி லிமிடெட் என்னும் நிறுவனத்திடம் இருந்து விதை நெல்லை வாங்கி பயிரிட்டனர்.  இது மகாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனம் ஆகும்.   ஆனால் அனைத்து விதைகளும் போலி விதைகள் என்பதால், பயிர்கள் நாசாமாகி  பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

இது குறித்து பகத் விவசாயத்துறைக்கு புகார் அளித்தார்.  இதை விசாரித்த விவசாயத்துறை துணை இயக்குனர் ராஜேஷ் திரிபாதி அந்த நிறுவனத்துக்கு தடை விதித்தார்.   ஆனால் அமைச்சர் கௌரிசங்கர் இடையில் புகுந்து அந்த தடையை கேன்சல் செய்தார்.   இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்காமலே தடை செய்ததாக ராஜேஷ் திரிபாதி மீதும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் அந்த நிறுவனத்துக்கு பரிந்துரை செய்கிறார் என பகத் கூறினார்.  அமைச்சர் மறுத்தார்.  இருவரும் ஒரு நிகழ்வில் சந்தித்த போது இருவரிடையேயும் காரசாரமான விவாதம் நடந்தது.   அது மேலும் வலுத்து கைகலப்பு ஆகும் முன் பாதுகாவலர்களும், கட்சித் தொண்டர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இது பற்றி ம பி முதல்வர் மற்றும் பாஜக கட்சித்தலைவர்களிடம் புகார் சென்றது.  அவர்கள் பகத் அமைதி காக்க வேண்டும் என அமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தனர்.  அந்த நிறுவனம் பற்றி விசாரணை நடத்துவதாக பகத்துக்கு சமாதானம் கூறப்பட்டுள்ளது.

இதுவரை ம. பி.  மாநிலத்தில் தடை செய்யப்பட்ட விதை விற்பனை நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் இன்னும் தடையில் உள்ளன.  85 நிறுவனங்கள் பல மாத போராட்டத்துக்குப் பின் தடையை திரும்பப் பெற்றன.   ஆனால் யசோதா ஹைபிரிட் சீட்ஸ் பி லிமிடெட் வெறும் 3 தினங்களில் தடையை ரத்து செய்ய வைத்துள்ளது.