17வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்!

டில்லி:

17வது மக்களவையின்  புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி தொடங்கிய நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2 நாட்களாக பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தற்காலிக இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார், அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று  சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் பதவிக்கு  ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லாவை தேர்வு செய்ய ஆளும் கட்சி முடிவு செய்து அறிவித்தது.

இன்று நாடாளுமன்ற அவை கூடியபோது ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன் மொழிந்தார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிட முன்வராத நிலையில் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓம் பிர்லாவுக்கு அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முழு ஆதரவு தந்ததை அடுத்து அவர் போட்டியின்றி முழுமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஓம் பிர்லா  மாணவர் பருவத்திலேயே அரசியல் களத்தில் புகுந்தவர்.  3 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பியாக இருந்துள்ள நிலையில், தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை இருப்பிடம் சென்று அழைத்து வந்த பிரதமர் மோடி, சபாநாயகருக்கான இருக்கைக்கு அழைத்து சென்று அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அவருக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார். இதையடுத்து மத்திய அமைச்சர் ஒவ்வொருவரின் பெயரையும், இலாகாவையும் குறிப்பிட்டு மக்களவைக்கு மோடி அறிமுகம் செய்து வைக்கிறார். ஓம் பிர்லாவுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்டது மக்களவை சபாநாயகர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.