காங்கிரசுக்கு தாவும் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்

புனே: பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் காகடே, காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ராஜ்யசபாவுக்கு சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்டவர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் காகடே, தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதியில் போட்டியிட விரும்பும் இவருக்கு, பாரதீய ஜனதா கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவுசெய்துள்ள இவர் கூறியதாவது, “ராகுல் காந்தியின் ஆலோசனையின்படி செயல்பட முடிவுசெய்துள்ளேன். எனவே, விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளேன்.

கடந்த 2 நாட்களாக நான் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினேன். அவர்களிடம், நான் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்ற ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தேன். அவர்கள், என்னுடைய எண்ணத்தை வரவேற்று, கட்சியில் இணைவதற்கு விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தனர்” என்றார்.

பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்றிருக்கும் இவரின் விலகல் முடிவு, அந்தக் கட்சியின் பல மட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி