பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலுக்கு பிறகும், பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரை கட்டிப் பிடிக்க நவ்ஜோத் சிங் சித்து விரும்புவாரா ? என பாஜக எம்.பி மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி லேகி, “பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும், தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான சிறுமிகளை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி மதம் மாற்றி முஸ்லிம் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அங்குள்ள காவல்துறையினரும், அரசும் இதற்கு உடந்தையாக செயல்படுகிறது. சிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு சான்றாக இந்த சம்பவங்கள் திகழ்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் சிறுபான்மையினத்தவர்கள் இந்தியாவில் தஞ்சமடைகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குதான் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

இந்தத் தருணத்தில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து எங்கே போனார் எனத் தெரியவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகும் அவர், பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரை கட்டிப் பிடிக்க விரும்புவாரா ? இதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.