டெல்லி: மக்களவையில் திமுக எம்பி ஆ. ராசா, காந்தியை கொன்றது கோட்சே என்று கூறியதற்கு பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு நிலவியது.

மக்களவையில் எஸ்பிஜி சட்ட திருத்தம் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்போது அவையில் திமுக எம்பி ஆ. ராசா பேசினார். அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தியை கோட்சே ஏன் கொன்றார்? 32 ஆண்டுகாலம் அவர் மீது கோட்சே வைத்திருந்த வெறுப்புணர்ச்சி தான் காரணம். ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை பற்றி கோட்சே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பேசினார்.

அப்போது அவையில் இருந்த பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர் வெகுண்டெழுந்தார். உடனடியாக ஆ. ராசாவின் பேச்சை இடைமறித்தார். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் அவையில் சலசலப்பு எழுந்தது. ஆனால், பிரக்யாசிங் தாக்கூரின் எந்த பதிலையும் சபாநாயகர் அவை குறிப்பில் பதிவிடவில்லை. அதன் பின்னர், அவையில் பிரக்யாசிங் தாக்கூர் நடவடிக்கை பற்றி செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர் நாளை பதிலளிப்பார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.