ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தர்ணா செய்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்!

--

 

புதுடில்லி: பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் தர்ணாவில் அமர்ந்தார், விமான நிறுவனம் தான் முன்பதிவு செய்த இடத்தை ஒதுக்காமல் வேறு இருக்கையில் அமர வைத்ததற்காக தாகூர் செய்த தர்ணாவின் காரணமாக விமானம் 45 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்பியது.

டிசம்பர் 21 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எஸ்.ஜி 2498 (டெல்லி-போபால்) விமானத்தில் பிரக்யா தாகூர் இருக்கை 1 ஏ முன்பதிவு செய்திருந்தார், மேலும் தனது சொந்த சக்கர நாற்காலியில் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இந்த விமானத்தில், முதல் வரிசை அவசர வரிசை இருக்கையாதலால் சக்கர நாற்காலி பயணிகளுக்காக ஒதுக்கப்படவில்லை.  மேலும், பிரக்யா தாகூர் விமான நிறுவனம் மூலம் முன்பதிவு செய்யாததால் அவர் ஒரு சக்கர நாற்காலி பயணி என்ற உண்மையையும் விமான ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழியர்கள் குழு வேறு வரிசைக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டனர்.  ஆனால் அவர் மறுத்துவிட்டார். மேலாளர் மற்றும் பணியாளர்கள் அவரை வேறொரு இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். வெளியேறும் கதவு கொள்கை குறிப்பிடப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல் ஆவணத்தைத் தாகூர் கேட்டார். அவருக்குத் தெளிவுபடுத்துவதற்காக அதுவும் காட்டப்பட்டது

விமானம் கிளம்புவது தாமதமாகிக் கொண்டே வந்ததால் மற்ற பயணிகள் அமைதியிழக்க ஆரம்பித்தனர்.  அவர்களும் தாகூரை இருக்கையை மாற்றுமாறு கேட்டுக்கொண்டனர் ஆனாலும் தாகூர் அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.  இதனால், பயணிகள் விமான ஊழியர்களை தாகூரை விமானத்தை விட்டு இறக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக, பிரக்யா தாகூர் தனது இருக்கையை 1A இலிருந்து 2B ஆக மாற்ற ஒப்புக் கொண்டு விமானம் புறப்பட்டது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் இருப்பினும் தமது பயணிகளின் பாதுகாப்பு ஸ்பைஸ்ஜெட்டில் மிக முக்கியமானது என்றார் அதன் செய்தித் தொடர்பாளர்.