டில்லி

டந்த 2ஆம் தேதி இந்தியா முழுவதும் தலித் மக்கள் நடத்திய முழு அடைப்புக்குப் பின் அவர்கள் மீதான கொடுமை அதிகரித்துள்ளதாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலித் மக்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் திருத்தங்கள் கொண்டு வந்தது.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.   கடந்த 2 ஆம் தேதி அன்று இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் முழு அடைப்பு நடந்தது.   இந்த அடைப்பின் போது தலித் சமுதாயத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் ரெயில்களை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

அத்துடன் பல இடங்களில் கலவரம் வெடித்தது.    நாட்டில் 7 மாநிலங்களில் தீவைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.    அத்துடன் பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையால் 11 பேர் மரணம் அடைந்தனர்.  பலர் படுகாயம் அடைந்தனர்.    இது போல சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம் நிகழ்ந்துள்ளன.

வடகிழக்கு டில்லி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ்.   பாஜகவை சேர்ந்த இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுளார்.  அதில், “ஏப்ரல் 2 முழு அடைப்பில் கலந்துக் கொண்ட தலித்துகள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.   இவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பதிந்துள்ளார்.

அத்துடன் “பார்மர், ஜலோர். ஜெய்ப்பூர், குவாலியர், மீரட், புலண்ட்சாகர், கரோலி உள்ளிட்ட பல பகுதிகளில் தலித்துகள் தொல்லைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.   இட ஒதுக்கிட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் தலித் மக்களை தாக்கியும் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியும் அலைக்கழிக்கின்றனர்.   சமீபத்தில் குவாலியரை சேர்ந்த ஒரு தலித் அமைப்பாளர் காரணம் இன்றி துன்புறுத்தப்பட்டுள்ளார்”  என தெரிவித்துள்ளார்.

பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தலித் விவகாரத்தில் அரசு மேல் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.