பாட்னா:

பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து  பேசினார். வரும் 6ந்தேதி சத்ருகன்சின்ஹா முறைப்படி காங்கிரஸ் கட்சியில்  இணைகிறார்.

பாஜகவுக்கு மோடி மற்றும் அமித்ஷா தலைமையேற்ற பிறகு மூத்த தலைவர்கள் பலர் அவமானப் படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக  மோடியின் ஆட்சியின் அவலங்களையும் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவரும், பாட்னா சாகிப் தொகுதி பாஜக எம்.பி.யுமான சத்ருகன்சின்கா,  மோடியின் ஆட்சி, அறிவிப்புகள் குறித்து கடுமையாக சாடி வந்தார். இதன் காரணமாக பாஜகவில் சத்ருகன்சின்ஹா மீதான அதிருப்தி நிலவியது. அவர் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த சத்ருகன்சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து  இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். வரும் ஏப்ரல் 6ந்தேதி முறைப்படி சத்ருகன்சின்ஹா  காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.