லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவோ மக்களவைத் தொகுதி பாரதீய ஜனதா உறுப்பினர் சாக்சி மஹராஜ், தனக்கு அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்‍லை எனில், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாரதீய ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டேவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “உன்னாவோ தொகுதியில், என்னைவிட பெரிய பிற்படுத்தப்பட்ட தலைவர் யாரும் கிடையாது. நான் இத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கு முன்பாக, கடந்த 10 ஆண்டுகளாக, இங்கே பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாரதீய ஜனதாக் கட்சி புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை நம் கட்சி சுமக்க வேண்டியிருக்கும். எனக்கு இத்தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால், 4 முதல் 5 லட்சம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைவேன்.

என்னை எதிர்த்துப் போட்டியிடும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழப்பார்கள். நான் இந்தத் தொகுதியைத் தவிர, வேறு எந்த ஒன்றிலும் போட்டியிட மாட்டேன்.

எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதற்கான விளைவுகள் மகிழ்ச்சியானதாக இருக்காது” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

– மதுரை மாயாண்டி