மம்தா கட்சியில் சேர்ந்ததால் மனைவியை விவாகரத்து செய்யும் பா.ஜ.க. எம்.பி.

 

கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அணி அணியாக எம்.எல்.ஏ.க்கள் விலகி, பா.ஜ.க. வில் இணைந்து வரும் நிலையில் ஒரு புதிய திருப்பமாக சுஜாதா மண்டல் கான் என்பவர் நேற்று திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவர் வேறு யாருமல்ல!

பிஷ்னுபூர் மக்களவை தொகுதி பா.ஜ.க, எம்.பி.யான சௌமித்ரா கான் என்பவரின் மனைவி ஆவார். பா.ஜ.க.வில் உறுப்பினராக இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் மனைவி, மம்தா கட்சியில் சேர்ந்ததால், தர்ம சங்கடத்துக்கு ஆளான சௌமித்ரா கான், உடனடியாக செய்தியாளர்களை அழைத்து, “மம்தா கட்சியில் சேர்ந்த என் மனைவிக்கும், எனக்கும் இனிமேல் ஒட்டும் இல்லை…உறவும் இல்லை” என அறிவித்தார்.

“திரினாமூல் காங்கிரசில் சேர்ந்த என் மனைவியை நான் விவாகரத்து செய்ய போகிறேன்” என அறிவித்த பா.ஜ.க, எம்.பி, சௌமித்ரா கான் “இனிமேல் அவர் என் பெயரில் உள்ள கான் என்ற பெயரை தனது பெயரோடு சேர்த்துக்கொள்ள கூடாது” என ஆவேசமாக கூறினார்.

இதனிடையே பா.ஜ.க.வில் இருந்து விலகிய சுஜாதா கான் “பா.ஜ.க.வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. ஊழல்வாதிகளுக்கு தான் அங்கு மதிப்பு” என தெரிவித்தார்.

– பா. பாரதி