டில்லி

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரில் மோடியின் பெயரை இணைக்க வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாதம் 5ஆம் தேதி அன்று மோடி அரசு விதி எண் 370 ஐ நீக்கி  காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் எனவும் லடாக் எனவும் பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவின் அறுதிப் பெரும்பான்மை காரணமாக ஒப்புதல் பெறப்பட்டது. காஷ்மீர் பகுதியில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டு மாநிலம் குறித்த அனைத்து தகவல்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில். “ஒரு நாடு, ஒரே சட்டம் என்னும் கொள்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து விதி எண் 370 ஐ நீக்கியதன் மூலம் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அரசு அமைந்து 70 நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரித்திர பூர்வமான நடவடிக்கை 2/3 பங்கு உறுப்பினர்களின்  ஆதரவால் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மோடியின் விதி எண் 370 நீக்க நடவடிக்கைக்கு பாஜகவினர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து டில்லியின் மக்களவை பாஜக  உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், “நாட்டில் எங்கும் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன். நாம் நமது முன்னோர்கள் செய்த தவறுகளைத் திருத்துகிறோம். நான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரை இணைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.