இன்று தொடங்குகிறது பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம்!

டில்லி,
பாரதியஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் தொடங்குகிறது. இதில் பண மதிப்பிழப்பு மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டத்திற்கு பாரதியஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும், குறிப்பாக உ.பி.யில் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகம் வகுக்கப்படும்.

மேலும் அண்மையில் சில மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மற்றும் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.  கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.