சென்னை:

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில் நடை திறக்க அனுமதிக்க கூடாது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

புத்தாண்டு பிறப்பதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் 31ந்தேதி நள்ளிரவு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக இந்துக்கோவில்களும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு இந்து மதத்தை சேர்ந்த ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் ஒருவர் ஆகம விதிப்படி நள்ளிரவில் கோவில் திறக்கக்கூடாது என, அதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்கள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த தேசிய செயலாளரான எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது. எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடத் கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே அரசு அதை தடை செய்யவும்

மேலும்,. உற்சவ காலங்களில் மட்டுமே நடை திறக்கப்பட வேண்டும். ஆந்திராவில் கோவில்கள் திறப்பதற்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.    

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.