ராய்ப்பூர்

த்திஸ்கர் மாநிலத்தில் 5 திட்டங்களின் பெயரை காங்கிரஸ் அரசு மாற்றியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அரசு அமைத்தது. முந்தைய பாஜக அரசின் ஜன சங்க தலைவர் பண்டிட் தினதயாள் உபாத்யாயாவின் பெயரில் பல நலத் திட்டங்கள் நடந்து வந்தன.  அனைத்து நல திட்டங்களுக்கும் எந்த ஒரு அரசுப் பதவியும் வகிக்காத தீனதயாள் உபாத்யாயாவின் பெயரை வைப்பதற்கு அப்போதிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

தற்போதைய புதிய காங்கிரஸ் அரசு நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ”பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சுவவிளம்பன் யோஜனா இனி ராஜிவ் காந்தி சுவவிளம்பன் யோஜனா என அழைக்கப்படும். பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சர்வசமாஜ் மாங்க்லிக் பவன் யோஜனா இனி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பெயரில் அழைக்கப்படும்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா எல் இ டி பல்பு வழங்கும் திட்டம் இனி இந்திரா பிரியதர்ஷினி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.  பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆதரவற்றோர் விடுதி அமைக்கும் திட்டம் ராஜிவ் காந்தி ஆதரவற்றோர் விடுதி அமைக்கும் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. அதைப் போல் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் பெயர் இந்திரா பிரியதர்சினி துய குடிநீர் வழங்கும் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாஜகவினர் கடுமையாக காங்கிரஸ் அரசை சாடி வருகின்றனர். அம்மாநில முன்னாள் முதல்வர் ரமண் சிங், “காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே பண்டிட் தீனதயாள் உபாத்யாயா வின் பெயரில் அமைக்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை அவருடைய மறவு தினமான பிப்ரவரி 11 அன்று மாற்றி உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மட்டமான மனநிலையை பிரதிபலிக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் பழி வாங்கும் அரசியலில் இன்னொரு அத்தியாயம்” என தெரிவித்துள்ளார்.