நம்பிக்கை இல்லா தீர்மானம் : பாஜக உறுப்பினர்களுக்கு நாளை அவசியம் வர உத்தரவு

டில்லி

நாளை பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ளதால் அனைத்து பாஜக உறுப்பினர்களும் தவறாமல் வர வேண்டும் என கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.  இந்த தீர்மானத்தை சபாநாயகர் அனுமதித்துள்ளார்.  அதை ஒட்டி நாளை காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பாராளுமன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.   நாளை ஜீரோ அவர் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவுக்கு அனுமதி இல்லை.

நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து நாளை விவாதம் நடைபெறும்,   அதன் பிறகு இதை ஒட்டி பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் எனவும் அதன் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   வாக்கெடுப்பு குறித்து பாஜக அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, “வரும் ஜூலை 20 ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வென்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்” என தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பை வரும் திங்கட் கிழமை அன்று தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.   அன்றைய தினத்தில் அக்கட்சியில் தியாகிகள் தினம் கொண்டாட உள்ளதால் அக்கட்சியினர் அனைவரும் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ள திங்கட்கிழமை வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக உறுப்பினர்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று அவசியம் பாராளுமன்ற தொடரில் கலந்துக் கொள்ள வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.   அத்துடன் அன்று கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.