இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம்

டில்லி

டில்லியில் இன்று பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

டில்லியில் தற்போது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக் கொள்ள அனைத்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களும் டில்லியில் குழுமி உள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற உள்ளது.

வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு இன்று பாஜகவின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆயினும் தற்போது மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளதால் அது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதால் இந்த கூட்டம் பலராலும் கவனிக்கப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்ந்து பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றி மூன்று தொகுதிகளில் மட்டுமே தோல்வி அடைந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது.

இவ்வாறு இழந்த செல்வாக்கை மீட்க இந்த கூட்டத்தில் பாஜக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக இது குறித்த நடவடிக்கைகள் எடுக்க பாஜக எண்ணி உள்ளதாக கூறப்படுகிறது.