பாஜ கட்சி தேர்தல் ஓராண்டுக்கு ஒத்தி வைப்பு? பாஜ தேசிய செயற்குழுவில் முடிவு

டில்லி:

பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல்களை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாரதியஜனதா தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டில்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்றுமுதல் 2 நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த கூட்டத்தில்  பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இன்றைய கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் பிரதமர் ‘வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, பாஜகவில் நடைபெற வேண்டிய கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய கட்சி பொறுப்பாளர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளதால்,  கட்சி தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது நாட்டில் உள்ள  பல்வேறு பிரச்னைகள் குறித்தும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தல் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வட மாநிலங்களில் கிளம்பியுள்ள எஸ்சி., எஸ்டி. சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.