கர்நாடகா தேர்தல்….சுரங்க ஊழல் புகழ் ஜனார்த்தன் ரெட்டி சகோதரருக்கு பாஜக.வில் சீட்

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடக்கிறது. இதற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. பாஜக.வின் 82 வேட்பாளர்கள் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் எடியூரப்பா அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி சிறையிலும் அடைக்கப்பட்டார். இவரது சகோதரர் சோமசேகர ரெட்டி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது

ஜனார்த்தன ரெட்டி சிறையில் இருந்தபோது அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சோமசேகர ரெட்டி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் விவேக் ரெட்டி கூறுகையில், ‘‘பெல்லாரி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சி சமரசம் செய்துகொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவால் டுவிட்டரில், ‘‘எடியூரப்பா அரசு ஊழல் மிகுந்த அரசு என்று அமித்ஷா கூறியது தற்போது உண்மையாகிவிட்டது. ஜனார்த்தன் ரெட்டி சகோதரர் சோமசேகர் ரெட்டி பாஜக சார்பில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் நில ஊழல் வழக்கில் சிக்கிய கிருஷ்ணய்யா ஷெட்டிக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது’’ என்றார்.