ராஞ்சி

முன்னாள் பீகார் பிரதமர் லாலு பிரசாத் யாதவை விஷம் அளித்து கொல்ல பாஜக சதி செய்வதாக அவர் மனைவி ராப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னாள் பீகார் மாநில முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். ராஞ்சி சிறையில் அடைக்கபட்ட அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாலுவை மருத்துவனையில் பார்க்க அவர் மகன் தேஜஸ்வி உள்ளிட்ட யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து லாலுவின் மனைவியும் முன்னாள் பீகார் முதல்வரும் ஆன ராப்ரி தேவி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ராப்ரி தேவி, “பாஜக மத்திய அரசிலும் ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளது. அக்கட்சி ராஞ்சி மருத்துவமனையில் லாலுவுக்கு விஷம் அளித்து கொல்ல எண்ணி உள்ளது. அவரை மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல பாஜக விரும்புகிறது.

பாஜக நினைத்தால் எங்கள் அனைவரையும் கொல்ல முடியும். ஆயினும் நாங்கள் பாஜகவின் சர்வாதிகாரத்தை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். லாலுவுக்கு ஏதேனும் நேர்ந்தால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராக உள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் உள்ள லாலுவை சந்திக்க சனிக்கிழமை அன்று சென்ற தேஜஸ்விக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சர்வாதிகார பாஜக அரசு அவரை சந்திக்க யரரையும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் லாலுவை பார்க்க மூன்று பேர்கள் வரை அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அவர் மகனுக்கும் அனுமதி வழங்கவில்லை” என கூறி உள்ளார்.

இது குறித்து பீகார் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த், “லாலு பிரசாத் யாதவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் தோல்வி பயத்தில் உள்ளதால் இது போல கூறி அனுதாபம் பெற முயல்கிறது. சட்டம் ஒழுங்கு காரணமாக லாலுவை சந்திக்க அரசு மறுத்துள்ளது. இதில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.